ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோயில்

தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்திய திசையன்விளை சுடலை ஆண்டவர் தமிழகத்தில் காவல் தெய்வங்களுக்கு ஊர்கள் தோறும் பல்வேறு பெயர்களில் கோயில்கள் அமைந்துள்ளன. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டங்களில் பிரதானகாவல் தெய்வமாக வணங்கப்படுவது சுடலை மாடசுவாமியை தான். இப்பகுதியில் இதன் கோயில்கள் இல்லாத கிராமங்களே இல்லை எனகூறலாம், காவல்தெய்வமாக சுடலை மாடசுவாமியை கருதினாலும், ஆண்டுதோறும் இக்கோயில்களில் நடைபெறும் கொடைவிழாக்கள், பெரிய ஆலயங்களுக்கு இணையாக சிறப்பாக நடந்துவருகின்றது. ஏனெனில் கையிலையில் சிவபெருமான் மற்றும் பார்வதியிடம், நான் பூலோகம் செல்லவேண்டும் என்றால் எனக்கு ஊட்டு போட்டு, கொடைவிழா நடத்தவேண்டும் என்று அடம்பிடித்துவரம்வாங்கி, சுடலை மாடன்சுவாமி பூலோகம் வந்த நிகழ்வை கூறுகின்றனர். இதனால் எவ்வளவு தொலை தூர ஊர்களுக்கு பிழைப்பு தேடிசென்றிருந்தவர்கள் கூட, குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குவந்து, இவ்விழாவில் பங்கேற்று சுடலை சுவாமிக்கு கிடாவெட்டி பொங்கலிட்டு படையலிட மறப்பதில்லை. தென்மாவட்டத்தில் பல்வேறுஊர்களில் சுடலை கோயில்கள் இருப்பினும், திசையன்விளை வடக்குத் தெருவில் அமைந்துள்ள சில நூற்றாண்டுகளுக் குமுற்பட்ட, சுடலை ஆண்டவர் கோயில் எல்லாவகையிலும் முற்றிலும்மாறுபட்டது. தற்போது பெரும்பாலான சுடலை மாடசுவாமி கோயில்கள் சுடலை ஆண்டவர் கோயில் என்றேஅழைக்கப்படுகின்றது. இந்த பெயர் முதன் முதலாக சுவாமி உத்தரவுபடி சூட்டப்பட்ட முதன்மை கோயில் இதுவே ஆகும். பொதுவாக எல்லா ஊர்களிலும் அம்மன் கோயில் ஒன்று ஊரின் பிரதான கோயிலாகவும், அக்கோயிலின் வெளியிலோ, அல்லது அக்கோயிலுக்கு இணைகோயிலாகவும் தான், சுடலை மாடசுவாமிகோயில் இருப்பதுண்டு ஆனால் திசையன்விளை வடக்கு தெருவில் உள்ள இதன் சுமார் 1500க்கு மேற்பட்டவரிதாரர்களும் இந்த சுடலை ஆண்டவர் கோயிலை மட்டும் தான் பிரதான கோயிலாக கருதி வழிபாடு செய்து வருவது இதன் தனி சிறப்பாகும். சத்தியவாக்கு அடிப்படையில், பிடிமண் ஏதுவும் இன்றி, சுயமாக தோன்றியது இக்கோயிலாகும். இங்குள்ள கிணற்று நீரிலேயே இக்கோயிலுக்கு தீபம் ஏற்றப்பட்டுள்ள வரலாற்று உண்மை உள்ளது. கடந்த 10ஆண்டுகளுக்கு முன்னர் கூட கொடை விழாவில் இங்கு தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்தி பரவசம் ஏற்படுத்தியது குறிப்படதக்கது. இங்கு சுடலை ஆண்டவர், பேச்சிஅம்மன், பிரம்மசக்தி, சிவன் இணைந்த பெருமாள், முண்டன், முன்னடி ஆகிய தெய்வங்களுக்கு சிலைகள் அமைத்து பூஜை வழிபாடுகள் நடத்தினாலும் கூட, மற்ற கோயில்களில் இருந்து மாறுபட்டு, இக்கோயில் விழாவில் ஒருவர் மட்டுமேஆ ராதனைவந்து ஆடி, அருள்வாக்கு கூறி திருநீறு வழங்குவார். அம்மையும் நானே அப்பனும் நானே என்ற தத்துவத்தை எடுத்து கூறும்வகையில், கொடை விழாவின் பிரதான நாளில் விரதம் இருந்த சிறுமியர், மற்றும் பெண்கள் பவனியாக கொண்டுவரும் மஞ்சளை கொண்டு வைக்கப்படும், மஞ்சள் பானையை சுவாமிகுளிக்கும் அழகு மெய்சிலிர்க்கவைப்பதாகும். சுடலை கோயில்களின் கொடைவிழாவின் முக்கிய நிகழ்வு, நடுசாமத்தில் சுவாமி மையானவேட்டைக்கு சென்று வருவதேஆகும். வழக்கமாக எல்லா கோயில்களிலும் அந்த சமுதாயம் சேர்ந்த மையானங்களுக்கு மட்டும் தான் சுவாமி வேட்டைக்கு சென்றுவரும். ஆனால் இக்கோயிலில் சுவாமி மாற்று மதகல்லறை தோட்டம் வழியாக தான் சில நூற்றாண்டுகளுக்கு மேலாக வேட்டைக்கு சென்று வருகின்றது. இந்நிகழ்வு இவ்ஊரில் நிலவும் மத நல்லிணக்கத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம்வரை சுவாமி மையான வேட்டைக்கு சென்று வருவதும் இங்கு மட்டும் தான். இதில் தூக்கி வீசப்படும் முட்டை பந்துபோல் குதித்துவரும், சுவாமி முட்டை விளையாட்டும் இங்குள்ள தனி சிறப்பாகும். சுடலை கோயில்களில் வழக்கமாக மகுடாட்டம், மேளம், வில்லிசை, ஆகியவை பிரதான நிகழ்ச்சியாகவும், கூடுதலாக கரகம், இன்னிசை, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும், ஆனால் இக்கோயிலில் இந்த அனைத்து கலைநிகழ்ச்சிகளோடு கூடுதலாக இலவச கண்சிகிச்சை மற்றும் மருத்துவ முகாம்களும், ஆண்டு தோறும் நடந்துவருகிறது.இந்த கோயிலின் 80 வயது மூத்தநிர்வாகி ஒருவர், சுவாமி அருளாடிவரும் போது, எனக்கு கண்ணொளி தாப்பா என்று கேட்டாரம், அன்று இரவே சுவாமி அவரது கனவில் தோன்றி, நான் கைலையில் நோய் தீர்க்கும் வரம் வாங்கி வந்தவன், உனக்கு மட்டுமல்ல என் கோயில் விழாவிற்க்கு வரும் எல்லோருக்கும் நானே மருத்துவனாக வந்து நோய்களை தீர்ப்பேன் என்றாராம். அன்று முதல் தான் இக்கோயில் விழாவில் மருத்துவமுகாம்கள் நடத்தபடுவதாக கூறுகின்றார்கள். இங்கு 41நாட்கள் சுவாமி காலடியில்வைத்து பூஜிக்கபட்டு வழங்கப்படும் பச்சை கயிற்றை பக்தர்கள் பயபக்தியுடன் வலதுகையில் அணிந்து கொள்கின்றார்கள். இது கையில் இருந்தால் துஷ்டசக்திகள் தம்மை அனுகாது என்பதும், மதிய கொடைவிழாவின் போது சுவாமி வீசி ஏறியும் பழம் கிடைத்த, குழந்தை பேறு இல்லாத தம்பதிகளுக்கு அவ்வாண்டே குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், நீண்ட நாட்களாக திருமண மாகாத பெண்கள்,சுவாமியை வேண்டி, அம்மனுக்கு அணிவித்த பட்டு சேலையை பெண் பார்க்கவரும் போது அணிந்து கொண்டால் உடன்வரன் அமையும் என்பதும் நீண்டகாலமாக இங்கு தொடர்ந்து வரும் நம்பிக்கைகள் ஆகும். வழக்கமாக பெண்கள் கற்பகாலத்தில் சுடலை கோயில்களுக்கு சென்று வழிபாடுகள் செய்வதில்லை, ஆனால் இக்கோயிலில் இந்த பாகுபாடு எதுவும் பெண்கள் பார்ப்பதில்லை. இங்கு சுடலை ஆண்டவர் சிவகலையில் சாந்தசொருபமாக நின்று அருள் பாலித்து வருகின்றார். இக்கோயில் விழாவில் சாதி, சமயவேறுபாடுகள் கடந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது கூடுதல் சிறப்பாகும். தென் மாவட்டத்தில் தினசரி பூஜை நடக்கும் சுடலை கோயில்கள் ஒரு சிலதான் உள்ளது. அதில் இதுவும் ஒன்றாகும். ஒரு காலத்தில் ஏழ்மை நிலையில் பனைமரம் ஏறும் தொழிலாளியாக இருந்த இப்பகுதிமக்கள், பணம் படைத்த செல்வந்தர்களாக மாற இந்த சுடலை ஆண்டவர் வழிபாடு தான் காரணம் என இவ்வட்டார பகுதி மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை உள்ளதால், இந்த சுவாமியை வடக்குத் தெரு மஹாராஜா என்றே அழைக்கிறார்கள். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆறு நாட்கள் ஆவணி மாதம் முதல் ஞாயிறு துவங்கி வெள்ளி வரை 6நாட்கள் ஆவணி பெருங்கொடைவிழாவும், மற்றும் அனைத்து விசேஷ தினங்களிலும் சிறப்பு பூஜையும், தினமும் இரவு 7.30மணிக்கு பூஜையும் நடந்துவருகின்றது. கோயில் தொடர்பாக நிர்வாகி சேம்பர்செல்வராஜ் Cell:9442610646 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
கட்டுரை
-எஸ்.ஏ.பொன்சேகரன்-
*சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரி பக்கம் உள்ள பெரும்பத்து என்ற ஊரில் வசித்துவந்த நிலச்சுவான்தாரான வீரகுமார சுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர். அந்த சமயத்தில் நாங்குநேரியில் ஒரு பெண்ணை இந்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சீரழித்து விட்டார். அந்த பெண் அவமானம் தாங்காமல் வைக்கோலில் தீயை வைத்து தானும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார். சாகும்போது அந்த குடும்பத்திற்கு சாபமிட்டு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் சீவலப்பேரி சுடலை முன் சத்தியம் செய்ய, அந்த குடும்பத்தை அழைத்தனர். அவர்கள் சாமிக்கு பயப்படவில்லை.

*இதனால் அந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்தனர். (காவல் நிலையம் வந்த நேரம்) சுவாமிக்கு பயப்படாதவர்கள் போலீசுக்கு பயந்தனர். அதனால் அந்த ஊரை காலி செய்து விட்டு வீரகுமார சுவாமியும், அவரது பிள்ளைகளும் தனது சொத்துக்களையும், நிலபுலன்களையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை பெற்றுக் கொண்டு திசையன்விளையில் சில இடங்களை வாங்கினார்கள். அவர்கள் அம்மன் கோவிலுக்கு வடகிழக்கில் குடியேறினார்கள். நில புலன்களும், பணமும் அதிகமாக இருந்ததால் ஆவணங்குடி இருப்போர் என்ற பெயர் பெற்றனர். சில வருடங்களில் சீவலப்பேரி சுடலை சுவாமி தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.

*இதனால் அந்த குடும்பத்தினர் சுடலை பெருமாள் நாடாரை பூசாரியாக்கி ஒரு கல்லை சுவாமியாக நினைத்து வழிபட்டு வந்தனர். இருப்பினும் சுவாமி தொந்தரவு செய்து வந்தார். ஆவணங்குடியிருப்போர் குடும்பத்தினர் மற்றும் வகையறாக்களும் அந்த இடத்தை காலி செய்து விட்டு திருச்செந்தூர் செல்லும் சாலையில் வீடு கட்டி வசித்து வந்தனர். அவர்கள் வசித்த காலத்தில் முதலில் வழிபட்ட ஆவணங்குடிபகுதி கோவிலில் இருந்து எடுத்து வந்த கல்லை சுவாமி என வழிபட்டனர். நாளடைவில் அது அழிந்துவிட்டது.

*இதற்கிடையில் வடபகுதியில் உள்ள ஒருவர், நான் சீவலப்பேரி வந்திருக்கிறேன்… எனக்கு ஆவணங்குடியிருப்போர் வகையறாக்கள் வடபகுதியில் நிலையமிட்டு தந்தால் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்வேன்… என்று சாமி ஆடி கூறினார். அங்குள்ளவர்கள் அவரை பைத்தியம், கிறுக்கன் என்று கூறி கிண்டல் அடித்து பேசினர். அந்த சமயத்தில் கிறிஸ்தவ மதம் வந்த நேரம். திசையன்விளையில் சின்ன பண்டாரம், பெரிய பண்டாரம் என இரு அண்ணன் தம்பிகள் குடும்பத்தினரும், மற்ற குடும்பத்தினரும் சேர்ந்து 40 வீடுகள் இருந்தன. இதில் சிலர் கிறிஸ்தவர்களாக மாறினர். மற்றவர்கள் இந்துக்களாகவே இருந்தனர். இந்து – கிறிஸ்தவர் என்ற பிரிவு இருந்தலும் அனைவரும் ஒற்றுமையாகவே இருந்தனர். இந்நிலையில் திசையன்விளையில் காலரா…………..

*பரவியதால் சிலர் இறந்தனர். இதனால் மக்களுக்கு பயம் ஏற்பட்டது. தெய்வம் என்று கூறி சாமியாடிய அந்த நபரிடம் சாமி என்ன சொல்கிறாய்….. இந்த காலராவுக்கு ஒரு பதில் சொல்….என்று கேட்டனர். அவரும் சாமி ஆடி, எனக்கு ஆவணங்குடியிருப்பின் தென்பகுதியில் நிலையமிட்ட இடத்தில், மக்களுக்கு தர்மம் செய்து அவ்விடத்தை தர்மபிறையாக்கி விட்டு எனக்கு வடபகுதியில் நிலையமிட்டு வணங்குங்கள் … காலரா காணாமல் போய்விடும் என்று கூறினார்.

*அவர்களும் சம்மதித்தனர். கலராவும் நின்றுவிட்டது.பொதுமக்கள் அனைவரும் ஆவணங்குடியிருப்போரிடம் பேசி, சாமி ஆடி கூறியதை தெரிவித்தனர். அவர்களும் வடபகுதியை நிலையமிட சம்மதித்தனர். பின்னர் சாமி கேட்ட இடத்தில் மண்ணால் பீடமிட்டு, முள் செடிகளை அகற்றி, பொங்கலிட்டு கொடை நடத்தினர். சில நாட்களில் ஓலையால் குடிசை கட்டி தீபம் இட்டு வந்தனர். சுவாமியின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. சுவாமி இருக்கும் இடம் திசையன்விளை முத்து நாயகம் மற்றும் ராமசாமிக்கு உள்ளதால், தங்களிடம் கேட்காமல் கோயில் கட்டியது அவர்களுக்கு பிடிக்கவில்லை . தனது நிலத்தை ஆக்கிரமித்து கொள்வார்கள் என நினைத்து அதை அகற்றி விட முடிவு செய்தனர். இதை தெய்வம் என ஆடியவர், இந்த விவகாரத்தை கூறினார். மக்கள் இதனால் மிகவும்வருத்தமடைந்தனர். சுவாமிக்கு தண்ணீரில் தீபம் ஏற்றி கும்பிட்டு வந்தனர்.

*இந்நிலையில் தெய்வமாக ஆடியவர் மீது உள்ள சாமி தனக்கு வரவேண்டும் என நினைத்து குமாரசாமி குடும்பத்தினர் ஒருவர் வைத்தியரிடம் சென்று தகடு கட்டி சாமியாடியிருக்கிறார். அதனால் 3 நாட்களில் அவர் இறந்துவிட்டார். அந்த குடும்பம் சிதறிப்போனது. அந்த குடும்பம் இன்றும் உள்ளது. இந்த நிலையில் பெரியம்மை நோயும் பரவியது. அதை தெய்வமாக சாமியாடியவர் தடுத்து நிறுத்தினார். ஞானப்பிரகாசம் குடும்பத்தில் பல அதிசயங்களை சுவாமி நிகழ்த்தினார். அந்த குடும்பத்தில் சிலர் இன்னும் கிறிஸ்த்துவர்களாகவே இருக்கின்றனர். ஞானப்பிரகாசம் மகன் யோவானை ஆவணங்குடியிருப்போர் மகளை திருமணம் செய்தனர்.

*கோவில் சிறப்பு நாளுக்கு நாள் பெருகியது. கோவில் சிறப்பை கண்டு சிலர் பொறாமை கொண்டு, தாவீது என்பவரையும், ஆளடியார் என்பவரையும் சரிக்கட்டி கோவிலை அப்புறப்படுத்த கேரளாவில் இருந்து வைத்தியரை வரவழைத்து பூஜைபோட்டு இரவோடு இரவாக தீயிட்டு கொளுத்தினர். கோவிலும், சிலையும் தீயில் கருகியது.

*இந்த நிலையில் சுவாமி ஆவணங்குடியிருப்போர் கனவில் தோன்றி எண்ணெய் தீபம் போட சொல்லியது . கோவிலுக்கு செல்ல முடியாதவாறு முள் செடிகளை வெட்டி போட்டு பாதையை எதிர்தரப்பினர் அடைத்தனர். கோவிலுக்கு சென்ற ஆவணங்குடியிருப்போர் முள் மீது விழுந்து காயமடைந்தனர். வீரகுமாரசாமி மறைந்துவிட்டார். அவரது குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தது. பின்னர் திருமால் பூஜை நடத்தினர். அப்போது செண்பகப்பெருமாள் மரணமடைந்தார்.

*பின்னர் கோட்டைக்கண் நாடார் தலைமையில், கொடைவிழா நடைபெற்றது. கோவிலுக்கு ஸ்ரீசுடலைஆண்டவர் என பெயர் மாற்றப்பட்டது. பிறகு கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த தானியேல் என்பவருக்கு சாமிவந்தது. அவரும் தொடர்ந்து ஆடினார். நாளடைவில் அவர் கீழே விழுந்து மரணமடைந்தார். அதன் பிறகு கொடை நடத்தியவர்கள் பால்குடம், கரகம், மேளம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். கோவிலுக்கு தீ வைத்தவர்கள் சின்னாபின்னம் ஆனார்கள். நாளடைவில் புதிய சிலை மற்றும் கட்டிடம் கட்டப்பட்டது . நன்கொடையும் வசூலித்தனர். வர வர கோவில் நிகழ்ச்சிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றது.

Credit: www.sudalaiandavar.com
error: Content is protected !!